Monday, April 27, 2009

HEALTH WARNING

கொதிக்கும் வெயிலுக்கு ஜில்லுன்னு ஒரு கிளாஸ் சாப்பிட்டால் சூடு குறையும் என்று பெரியவர்களும், சிறுவர்களும் கலர் கலர் பானங்களை விரும்பிக் குடிக்க, அதுவே விஷமாகிறது என்று கேள்விப்பட்டதும் பகீரென்றது.

பஸ் ஸ்டாண்ட், சாலைச் சந்திப்புகள் என நாலுபேர் கூடும் இடத்தில் எல்லாம், நீளமான பாக்ஸில் அறை அறையாக தடுத்து அறைக்கு ஒரு கலர் என கலர்கலரான லெமன், ஆரஞ்ச், மேங்கோ, பைனாப்பிள், பானங்கள் விதம் விதமாக வைக்கப்பட்டு படுகூலாக விற்கப்படுகிறது. வெறும் நான்கு ரூபாய்தான் விலை என்பதால் வியாபாரம் படுஜோர்! நாலு ரூபாய் கொடுத்து வாங்க வசதியில்லாத வர்களுக்கு இரண்டு ரூபாய்க்கு பாக்கெட் கூல்டிரிங்ஸ் வேறு...

இந்தக் கலரைப் பார்த்து பெரும்பாலும் மயங்கிப்போவது சிறுவர்கள்தான். பிள்ளைகளைப் பார்த்து அப்பாவும் அம்மாவும் கூட ஆளுக்கு ஒரு கிளாஸ் வாங்கிக் குடித்துவிட்டுச் செல்கின்றனர்.

ஆரஞ்ச், மாம்பழமெல்லாம் கொள்ளை விலை விற்கும்போது நாலு ரூபாய்க்கு எப்படி மாம்பழ ஜூஸ் கொடுக்க முடியுது?

``கட்டுப்படியாகுது, கொடுக் கிறோம் என்கிறார்கள்!'' கடைக்காரர்கள்.

எப்படி கட்டுப்படியாகிறது என்று அரசின் சுகாதார ஆய்வாளர் ஜாஃபர் அலியிடம் விசாரித்தபோது, அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்களை அடுக்கினார் அவர்.

``தண்ணீரைத் தவிர முழுக்க முழுக்க கெமிக்கல் மூலம் தான் இந்த கூல்டிரிங்ஸ் தயாரிக்கப்படுகிறது. சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும், உணவுப் பொருட்களில் பயன் படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ள, மெட்டானில் எல்லோ, (மஞ்சள் நிறம் கொடுக்கும்) ஆரோமைன் (பஞ்சு மிட்டாய் கலர் கொடுக்கும்) இவைகளை சாக்ரீமில் கலந்து தண்ணீர் ஊற்றினால் இனிப்பான கலர் தண்ணீர் வந்து விடும். இதில் ஆர்ட்டிஃபிஷியல் ஃபிளேவரிங் சப்சண்ட்டை (செயற்கை வாசனையூட்டி) கலந்துவிடுகிறார்கள். இது எல்லா வாசனையிலும் கிடைக்கிறது.

இப்படி கெமிக்கல்களை வைத்து ஒரு அண்டா கூல்டிரிங்ஸை மேங்கோ, லெமன், ஆரஞ்சு, பைனாப்பிள் என பல சுவையில் அரை மணிநேரத்தில் தயார் செய்து விடுகின்றனர். ஒரு கிளாஸ் அடக்கம் ஒரு ரூபாய் கூட வராது. குடித்தால் ஒன்றுக்கு நூறு நோய்கள் மட்டும் வரும்!'' என்கிறார்.

இந்த கூல்டிரிங் எந்தவிதமான ஆபத்தை உண்டாக்கும்?

``இயற்கைக்கு மாறாக முழுக்க முழுக்க தடை செய்யப்பட்ட கெமிக்கலினால் செய்யப்படும் இந்த கூல்டிரிங்ஸை தொடர்ந்து குடிப்பதால் நிச்சயம் கிட்னி பாதிக்கும். இதிலுள்ள கெமிக்கல் ஈரலை வீணாக்கி ஈரல் வீக்கம், ஈரல் நோய்களை உண்டாக்கும். மஞ்சள் காமாலை வரும். நுரையீரல் பாதிப்பு ஏற்படும்'' என்கிறார் பொது மருத்துவர் இளங்கோவன்.

இவ்வளவு ஆபத்துக்கள் இருந்தும் இந்த விஷத்தின் வியாபாரம் வெயிலின் உஷ்ணம் போல் உயர்ந்து கொண்டே போவதுதான் கொடுமையிலும் கொடுமை..

COURTESY: KUMUDAM

No comments:

Post a Comment